எட்டையாபுரம் காவல் நிலையம்
11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
தாப்பாத்தி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த முருகைய்யா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) என்பவர் நேற்று (23.11.2021) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்தி சென்றபோது கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. இளவரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி சுஜீவன் (எ) சந்தோசை கைது செய்தார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்.
செல்போனை திருடியவர் கைது.
கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயகுமார் (18) என்பவர் நேற்று (23.11.2021) வேலாயுதபுரம் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கே வந்த கோவில்பட்டி நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கொம்பையா மகன் மந்திரமூர்த்தி (24) என்பவர் விஜயகுமார் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை திருடி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. காந்தி வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரி மந்திரமூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 8000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர் கைது – 42 மதுபாட்டில்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (23.11.2021) முறப்பநாடு, ஏரல், சாயர்புரம், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை – எதிரிகள் 2 பேர் கைது. எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சினி காலனியை சேர்ந்த கண்ணன் மகன் சாரதி (எ) பார்த்தசாரதி (35) என்பவரை அவரது வீட்டின் அருகில் நேற்று (23.11.2021) மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதி (எ) பார்த்தசாரதி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் திரு. சிவக்குமார், திரு. முத்துகணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்த சாரதி (எ) பார்த்த சாரதி என்பவருக்கும் செல்சினி காலனியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் மாரிமுத்து (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாரிமுத்து மற்றும் மாரிமுத்துவின் உறவினரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (20) ஆகிய இருவரும் சேர்ந்து சாரதி (எ) பார்த்த சாரதியை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து எதிரிகள் மாரிமுத்து (26) மற்றும் கார்த்திக் (20) ஆகிய இருவரையும் மேற்படி தனிப்படையினர் இன்று (24.11.2021) கைது செய்தனர். மேலும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட பிரபல ரவுடி உட்பட இருவர் கைது.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி தலைமையிலான போலீசார் இன்று (24.11.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி தியேட்டர் ரோடு to கதிரேசன் கோவில் ரோடு சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர்களான முத்துப்பாண்டி மகன் சின்னராஜ் (34) மற்றும் காளிதாஸ் மகன் கார்த்திக் (19) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் சின்னராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மேற்படி எதிரிகளில் சின்னராஜ் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட மொத்தம் 27 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.